ஏரிக்குள் சடலத்தை தூக்கி செல்லும் அவலம்

Update: 2021-02-13 08:30 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் மயானத்திற்கு உரிய பாதை இல்லாததால், இறந்தவர் உடலை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏரி நீரில் தூக்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா கோவில்பத்து ஊராட்சி வில்வராயன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ஒரு பிரிவினருக்கு கடந்த பல ஆண்டுகளாக கல்லறை பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட வருவாய் ஆய்வாளர், கோட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தலையிட்டு வில்வராயன்பட்டி கோழிப்பண்ணைக்கு எதிரே மெயின் ரோட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் ஏரிக்குள் ஒரு இடத்தை காண்பித்து இப்பகுதியில் புதைக்க அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுநாள் வரை அவர்களுக்கு கல்லறைக்கு இடமும், பாதையும் ஏற்படுத்தி தரப்படவில்லை.

இதனால் மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீருக்குள் இறந்தவர் உடலை தூக்கிச் சென்று தண்ணீரிலேயே புதைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த ஒருவரின் உடலை ஏரி நீருக்குள் தூக்கிச் சென்று தண்ணீரிலேயே புதைக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் கல்லறை திருநாள் அன்று முன்னோர்களுக்கு மாலை மற்றும் வழிபாடு செய்ய முடியவில்லை என கூறும் அப்பகுதி மக்கள், உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு உரிய இடத்தையும் வழியையும் ஏற்படுத்தி தருமாறு அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News