மாணவி தற்கொலை : நீட்தேர்வு தோல்வி காரணமா என காவல்துறை விசாரணை
என்ஜினீயரிங் -அக்ரி படிப்பில் சேருவதற்கு முயற்சித்தபோது நீட் பயிற்சி மையம் சான்றிதழ்களை தரவில்லை என கூறப்படுகிறது;
நீட் தேர்வு தோல்வி காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி ( 46) யின் 18 வயது மகள் . 2018 ஆம் ஆண்டு பேராவூரணி மூவேந்தர் மேல்நிலைப் பள்ளியில் (455/500) மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை பிருந்தாவன் பள்ளியில் (421/600) மதிப்பெண் பெற்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு தனியாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இதில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு திருச்சி அருகே துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றுள்ளார்.
தற்போது நடைபெற்று முடிந்த நீட் தேர்விலும் அவர் வெற்றி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேறு என்ஜினீயரிங் அல்லது அக்ரி படிப்பில் சேருவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் தனியார் நீட் பயிற்சி மையம் 40 ஆயிரம் ரூபாய் பணம் கட்டிய நிலையில், மேலும் பாக்கிப் பணம் தரவேண்டும் என்று சொல்லி சான்றிதழ்களை தரவில்லை என்று கூறப்படுகிறது.
பெற்றோர் வெளியில் சென்ற நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஓட்டு வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், தங்களது மகள் தூக்கிட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஊமத்தநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் பேராவூரணி காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. பேராவூரணி வட்டாட்சியர், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.