பேராவூரணியில் மூதாட்டியை ஆற்றுக்குள் வீசிச்சென்ற மர்ம கும்பல் : மீட்ட கிராம நிர்வாக அதிகாரி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் மூதாட்டியை உயிரோடு ஆற்றுக்குள் மர்ம கும்பல் வீசி சென்றது. தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அதிகாரி மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் மூதாட்டியை உயிரோடு ஆற்றுக்குள் மர்ம கும்பல் வீசி சென்றது. தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அதிகாரி மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
பேராவூரணி பகுதியில் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்பார்வை குறைவான மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களாக பிச்சை எடுத்து நாட்களை கடத்திக் கொண்டிருந்தார்.
அவர் யார் எந்த ஊர் என்ற விபரம் யாருக்கும் தெரியவில்லை. கொரோனா ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாததாலும், அவரால் தனியாக நடந்து செல்ல முடியாததாலும் கடந்த இரண்டு நாட்களாக ரயில்வே நிலையம் எதிரே உள்ள மரத்தடியில் பட்டினியோடு கிடந்துள்ளார்.
அதை பொறுத்துக்கொள்ள முடியாத யாரோ சிலர் அவரை தூக்கி வந்து பழைய பேருந்து நிலையம் பின்புறமாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லும் ஆனந்தவல்லி வாய்க்காலுக்குள் ஆடையில்லாமல் போட்டுவிட்டு சென்று விட்டனர்.
புதர்மண்டிய வாய்க்காலுக்குள் கிடந்த மூதாட்டியை பார்த்த சிலர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆனந்தவல்லி வாய்க்காலில் சடலம் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் அருண் பிரகாஷ், துப்புரவு மேற்பார்வையாளர் வீரமணி, கிராம உதவியாளர் சக்திவேல் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பார்வையிட்டபோது மூதாட்டிக்கு உயிர் இருப்பது தெரியவந்தது.
அவருக்கு உடனடியாக புது சேலை வாங்கிவந்து மூதாட்டி மேல் போர்த்திய துப்புரவு பணியாளர்கள் பாண்டி, விஜய் ஆகிய இருவரும் ஆற்றிலிருந்து தூக்கி பேருந்து நிலையம் பின்புறம் அமர வைத்தனர்.
அமர வைத்தவுடன் குடிக்க தண்ணீர் கேட்டார் உடனடியாக அவருக்கு தண்ணீர் மற்றும் டீ கிராம உதவியாளர் வாங்கி கொடுத்தவுடன் நன்றாக அமர்ந்திருந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.