பேராவூரணி அருகே மின்கசிவால் தீவிபத்து; குடிசை வீடு எரிந்து நாசம்

பேராவூரணி அருகே எட்டிவயல் கிராமத்தில் மின்கசிவால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.

Update: 2021-08-17 08:00 GMT
தீவிபத்தில் முற்றிலும் எரிந்து நாசமான குடிசை வீடு.



தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே எட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் சுப்பிரமணியன்(45), விவசாயி. இந்நிலையில் சுப்பிரமணியன், இவரது மனைவி லதா ஆகியோர் விவசாய வேலைக்காக வெளியில் சென்று விட்டனர். சுப்பிரமணியனின் தாயார் பாக்கியம்(67), மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது, மின்கசிவு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக வீடு தீப்பற்றி எரிந்ததும், பாக்கியம் வெளியே வந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ வீடு முழுவதும் மளமளவென பரவியது.  

தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வீரர்கள், மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

இத்தீவிபத்தில், 6 பவுன் நகை, அடகில் இருந்த நகையை மீட்பதற்காக வங்கியில் இருந்து எடுத்து வந்து வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ.2 லட்சம், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் நிலப் பத்திரங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஆடைகள் ஆகியவையும் தீயில் கருகின.

பட்டுக்கோட்டை வட்டாட்சியர் கணேஷ்வரன் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன்(பொ) நேரில் சென்று வீடு தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீட்டின் உள்ளவர்களை அருகில் உள்ள உறவுக்காரர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News