கனமழையால் துார்வாராத ஏரிகள் உடைபட்டன

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முறையாக தூர்வாரும் பணிகள் நடைபெறாததால் பல்வேறு நீர்நிலைகள் உடைபட்டன, இதனால் விளை நிலங்களுக்குள் நீர் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.;

Update: 2021-01-15 08:30 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் கடந்த 5 தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் இந்த மழையினால் பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதனால் பல்வேறு காட்டாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மகாராஜா சமுத்திரம், நசுவினி ஆறு, அக்னி ஆறு, பாட்டுவனாச்சி ஆறு உள்ளிட்ட பல காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு சென்று கடலில் கலக்கிறது. தற்போது இந்த தண்ணீர் கடலில் கலப்பது ஒருபுறம் பாதுகாப்பு என்றாலும் இந்த தண்ணீரை தேக்கி வைத்தால் இந்த பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்கள் முழுமையான மூன்று போக சாகுபடியை செய்ய முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அதினாம்பட்டு கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாமுண்டி ஏரி முழு கொள்ளவை எட்டியது. இதனால் ஏரியின் தென்கரையில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர், கடலை, எள் போன்ற சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் அதினாம்பட்டு, வேங்காரயான்குடி, வல்லுாண்டாம்பட்டு கிராமமக்களை சேர்ந்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சுமார் 15 வருடங்களாக ஏரி முறையாக துார்வாரவில்லை என்பதால் தான், உடைப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Similar News