தஞ்சையில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
இடவசதி இல்லாததால் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு சாலையில் நெல் மணிகளை கொட்டி வைத்து 20 நாட்களாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்;
கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால், தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு, நெல் மணிகளை கொட்டி வைத்து 20 நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்கு ஏதுவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 248 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும், அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், நெல் தேக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 20 ஆயிரம் மூட்டைகள் நெல் தேக்கம் அடைந்துள்ளன.
நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால் சாலைகளிலும், தேசிய நெடுஞ்சாலைகளில் நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காத்திருக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் நெல் மணிகள் மழையில் நனைந்து மறைக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பூண்டியில் இருந்து அம்மாபேட்டை வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகளின் இருபுறமும் நெல் கொட்டி வைத்திருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து ஒரு நாளைக்கு ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். நெல்லைக் கொட்டி வைத்து, காய வைப்பதற்கு போதிய இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி கூறியதாவது: இன்னும் ஒருசில தினங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனவும், விவசாயிகளிடம் இருந்து விரைவாக நெல்லை கொள்முதல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.