பாபநாசம் பகுதி கோயில்களில் திருவாதிரை பெருவிழா - சுவாமி வீதி உலா
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதி கோயில்களில் திருவாதிரை பெருவிழாவையொட்டி சுவாமி வீதி உலா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவாதிரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பாபநாசம் 108 சிவாலயம் ராமலிங்கசுவாமி திருக்கோயில், திருப்பாலைத்துறை பாலைவனநாதர் திருக்கோயில், தேவராயன் பேட்டை மச்சபுரீஸ்வரர் திருக்கோயில், திருவைக்காவூர் வில்வவனேசுவரர் திருக்கோயில், உமையாள்புரம் காசி விசுவநாதர் கோயில், கபிஸ்தலம் அகத்தீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் திருவாதிரை பெருவிழாவை முன்னிட்டு அபிஷேக ஆராதனையுடன் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
அதுசமயம் நடராஜபெருமான் சிவகாமி அம்பாள் சுவாமி வீதிஉலா காட்சி முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி ஹரிஷ்குமார், தக்கார் லெட்சுமி, திருக்கோயில் எழுத்தர்கள் கோபாலகிருஷ்ணன், சங்கரமூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.