சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது.;
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காவது தலமாகும். இங்கு உள்ள 64 படிகளில், 60 படிகள் 60 தமிழ் ஆண்டுகளையும், 4 படிகள் 4 யுகங்களையும் குறிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று கடுமையாக பரவி வருவதால் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் கோவில்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பக்தர்கள் இன்றி கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடியை சிவாச்சாரியர்கள் ஏற்றி வைத்தனர்.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தைப்பூச விழாவையொட்டி கோவில் வளாகத்திலேயே பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.