தஞ்சை அருகே தம்பியை கொன்ற அண்ணன், கொச்சின் விமான நிலையத்தில் கைது
கபிஸ்தலம் அருகே சொத்து தகராறில் தம்பியை கொலை செய்து தலைமறைவாக இருந்த அண்ணன் கொச்சின் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் கல்வி பாளையம் ராஜகோபால் மகன் ராஜேஷ்கண்ணா, ன்இவருக்கும் இவரது தம்பி வினோத் கண்ணா என்பவருக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 4ம் தேதி வினோத் கண்ணா, தனது மாமியார் வீடான தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மணலூர் கிராமத்திற்கு வந்து விட்டு காரில் திரும்பி மேட்டு தெரு அருகே வந்தபோது அவரை அவரது அண்ணன் மற்றும் மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கில் கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதியப்பட்டு இந்த வழக்கு தொடர்பாக 13 நபர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில் முதல் எதிரியான இவரது அண்ணன் ராஜேஷ்கண்ணா இதுவரை தலைமறைவாகவே இருந்து வந்தார், இந்த நிலையில் அப்பொழுது கபிஸ்தலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காந்திமதி என்பவர் இவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைத்து உள்ளார்,
இது தெரியாமல் கடந்த 30 ஆம் தேதி ராஜேஷ் கண்ணா கத்தார் நாட்டிற்கு செல்வதற்காக கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவரை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் கார் மூலம் கேரள மாநிலம் கொச்சின் சென்று கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளி ராஜேஷ்கண்ணா என்பவரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, தஞ்சை சிறையில் அடைத்தனர்.