பாபநாசம் அருகே ஜாக்கி மூலம் இடமாற்றம் செய்யப்பட்ட கோயில்

பாபநாசம் அருகே இரும்புத்தலை கிராமத்தில் 50 ஆண்டு கால கோயில் ஜாக்கி மூலம் இடமாற்றம் செய்யப்பட்டது.

Update: 2021-09-15 04:00 GMT

ஜாக்கி மூலம் நகர்த்தப்பட்ட கோயில்.

பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் இரும்புத்தலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடைவீதி அருகே சாலையோரத்தில் ஸ்ரீமாரியம்மன் கோயில் உள்ளது. தற்போது கோயில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்கியுள்ளது. பாபநாசம் - சாலியமங்கலம் சாலை தற்போது போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. எதிர்காலத்தில் சாலையை விரிவாக்கம் செய்தால் மாரியம்மன் கோயிலின் கருவறை இடிபடும் என்பதால், கிராம மக்கள் ஒன்று கூடி கருவறையை இடிக்காமல், கும்பாபிஷேக திருப்பணியின் போது அதனை ஜாக்கி மூலம் அஸ்திவாரத்திலிருந்து 5 அடி உயரம் உயர்த்தியும், 21 அடி நீள தூரத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஜாக்கி மூலம் கோயில் கருவறையை நகர்த்தும் பணி தொடங்கியது. இதில் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் கட்டுமான வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.பாலாஜி கூறியதாவது: எங்களது ஊர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்கியது. அதில் முதற்கட்டமாக கோயில் கருவறையை இடமாற்றம் செய்தும், பூமியிலிருந்து 5 அடி உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு, இதற்காக ரூ.4 லட்சம் செலவில் ஜாக்கிகளை கொண்டு நகர்த்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணி ஒரிரு நாட்களில் நிறைவடையும். அதன்பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள பத்ரகாளியம்மன் சன்னதியை இதே முறையில் இடமாற்றம் செய்ய உள்ளோம் என்றார்.

Tags:    

Similar News