தஞ்சை- கொரோனா இறப்பை மறைத்து தந்தைக்கு சடங்கு: மனைவி-மகன் மீது வழக்கு!

தஞ்சாவூரில் தந்தை இறந்ததை மறைத்து இறுதி சடங்கு செய்த மகன் - தாய் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2021-05-30 04:30 GMT

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் வடக்கு முதலியார் தெரு பகுதியில் வசித்து வந்தவர் ராமசாமி (வயது 69). இவர் கோ-ஆப்டெக்ஸில் மேலாளராக பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பிச்சையம்மாள் (61). இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இவரது மகன் முருகானந்தம் (46), ஊட்டியில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ராமசாமி பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த 25-ந் தேதி ராமசாமிக்கும், அவரது மனைவி பிச்சை அம்மாளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இருவருக்கும் தொற்று உறுதியானது. இந்த நிலையில் இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  ராமசாமி உயிரிழந்தார்.

இதனையடுத்து ராமசாமியின் உடலை அவரது மகன் முருகானந்தம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி பிச்சையம்மாள் இருவரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்தனர். அங்கு உறவினர்கள் மற்றும் கிராமத்தினரிடம் ராமசாமி, கொரோனா தொற்றுக்கு இறக்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்தார் என்று கூறி உண்மையை மறைத்து கண்ணாடி பெட்டியில் ராமசாமியின் உடலை வைத்து இருந்தனர்.

காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை 12 மணி நேரம் கொரோனாவால் உயிரிழந்த ராமசாமியின் உடலை வீட்டில் வைத்து உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்களை அழைத்து இறுதி சடங்குகளை செய்து ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் கிராம நிர்வாக அலுவலர் மூலம் ராமசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார் என தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அனைவரும் ராமசாமி வீட்டிற்கு சென்று விசாரித்தபோது அவரது குடும்பத்தினர் உண்மையை தெரிவித்து உள்ளனர்.

இதனால் ராமசாமி வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றவர்கள் மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன் பீதியில் உறைந்தனர். இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பிளீச்சிங் பவுடர் தூவியும், கிருமிநாசினி மருந்தும் தெளித்தனர். அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தகரத்தால் அடைத்தனர்.

உடனடியாக கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் இந்த பகுதியில் உடனடியாக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததை யாருக்கும் சொல்லாமல் மறைந்த ராமசாமியின் மனைவி பிச்சையம்மாள், மகன் முருகானந்தம் ஆகியோர் மீது கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News