பாபநாசம் தாலுக்கா அலுவலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அடங்கல் வழங்குவது தொடர்பாக தெளிவான சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகம் வழங்காதது உள்பட பல கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டது;
பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் பாபநாசம் வட்டகிளை சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட இணைச் செயலாளர் ராஜேஷ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்: கருணை அடிப்படையில் 53 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அரசாணையின்படி பணிவரன்முறை செய்யப்பட்டதை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது. உரிய காலத்தில் நில அளவை நிர்வாக பயிற்சி அளிக்காமலும், சரியான வழிகாட்டுதல் நெறிமுறை வழங்காமலும், போதிய கால அவகாசம் அளிக்காமலும் பல்வேறுபட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கச் சொல்லி துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அச்சுறுத்துதல்,
பலமுறை வலியுறுத்தியும் அடங்கல் வழங்குவது தொடர்பாக தெளிவான சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகம் வழங்காதது, வருவாய் நிர்வாக ஆணையரின் சுற்றறிக்கையின்படி கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடத்தாமல் தொடர்ந்து அனைத்து விடுமுறை நாட்களிலும் பணி சுமையை ஏற்படுத்தி உடல், மனச்சோர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்துதல், மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகளை அச்சுறுத்தி பதிவுபெற்ற சங்க நிர்வாகத்தை செயல்படவிடாமல் மாவட்ட நிர்வாகம் தடுத்தல்,.
முன்கள பணியாளர்களுக்கான சலுகைகள் செலவினங்கள் மற்றும் பணப் பயன்களை மாவட்ட நிர்வாகம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பெற்றுத்தராது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் வட்ட செயலாளர் ஆரோக்கிய பவுல்ராஜ், வட்ட துணைத் தலைவர் நீலகண்டன், கோட்ட பொறுப்பாளர் காசிநாதன், வட்ட துணை செயலாளர் அன்பரசு, வட்ட இணைச் செயலாளர் பாலமுருகன், சரக செயலாளர்கள் பாலாஜி, நாராயணன், முபாரக் அலி, ஜனனி தேவி, பத்மநாபன், மகா பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.