கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கைக்குழந்தை சாவு
கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11/2 வயது கைக்குழந்தை பரிதாபமாக இறந்தது.;
பைல் படம்.
திருச்சி மாவட்டம், லால்குடி தெற்கு தெருவில் வசித்தவர் ராஜேந்திரன் மகன் பாலகுமார் (30). இவர் தனது மனைவி சுகன்யா, மகள் அஸ்விதா (வயது ஒன்றரை). இவர்களை மோட்டார்சைக்கிளில் அழைத்துக்கொண்டு லால்குடியில் இருந்து கும்பகோணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் கும்பகோணத்திலிருந்து லால்குடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்தார்.
கபிஸ்தலம் அருகே உள்ள அண்டகுடி கிராமத்தில் மெயின் ரோட்டில் பேருந்து நிறுத்தம் அருகில் வந்த பொழுது கபிஸ்தலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பாபநாசத்தைச் சேர்ந்த மெளனிஷா (23) என்பவரும் அவரது நண்பரும் அதிவேகமாக சென்றதில் பாலகுமாரின் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டனர். இதில் பாலகுமாரன் மனைவி சுகன்யா கையில் வைத்திருந்த ஒன்றரை வயது குழந்தை அஸ்விதா காயம் ஏற்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்த கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து பாலகுமார் (30) கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மாள், தலைமை காவலர் கார்த்திகேயன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு தப்பி ஓடி தலைமறைவாக உள்ள பாபநாசம் மௌனிஷா (23) மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.