பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பாபநாசம் வட்ட கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு அகவிலைப்படி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய பயனளிப்பு ஓய்வூதியம் மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைபடுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பாபநாசம் வட்டாட்சியர் முருகவேல், ஊரக வளர்ச்சி துறை ஒன்றிய பொறுப்பாளர் முரளி, நெடுஞ்சாலைத் துறை சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சோமநாத ராவ், வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன், வட்ட பொருளாளர் கார்த்திக், ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் தலைவர் கலியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.