பாபநாசம் ராணுவ சகோதரர்கள் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
பாபநாசம் ராணுவ சகோதரர்கள் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.90 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.;
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் அருகே உள்ள குண்டூர் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கபாலீஸ்வரன், பிரகதீஸ்வரன். இவர்கள் சண்டிகர் மற்றும் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களது சகோதரியின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் சொந்த கிராமத்திற்கு இருவரும் வந்தனர்.திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கோவில்கள் அனைத்தும் பூட்டப்பட்டன இதனால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
சகோதரர்கள் இருவரும் ஊரடங்கு முடிந்தவுடன் சகோதரி வீட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லலாம் என ஊரிலேயே தங்கி விட்டனர்.இந்நிலையில் குண்டூரில் அவர்கள் புதிய வீட்டின் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானதால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மின்சாரம் இன்றி தவித்துள்ளனர்.இதனையடுத்து சகோதரர்கள் இருவரும் குடும்பத்துடன் பகலில் புதிய வீட்டிலும், இரவில் குண்டர் கிராமத்தில் உள்ள தங்கள் பழைய வீட்டிலும் தங்கி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தங்கள் புதிய வீட்டு உறங்குவதற்கு தங்கள் பழைய வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
இன்று காலை தங்கள் புதிய வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கபாலீஸ்வரன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு போனது தெரியவந்தது.
இதனை அடுத்து மெலட்டூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ராணுவ வீரர் கபாலீஸ்வரன் கூறும்போது, ராணுவத்தில் நானும், எனது சகோதரரும் உயிரை பணையம் வைத்து பணியாற்றி சிறுக சிறுக சேமித்த பணத்தை கொண்டு வாங்கிய நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது மிகவும் மன வேதனையாக உள்ளது. எனவே போலீசார் ராணுவத்தில் நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய நகைகளை தயவுசெய்து மீட்டுக் கொடுக்குமாறு போலீசாரை கண்ணீர் மல்க ராணுவ வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.
நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.