தஞ்சாவூர் மாவட்டம் பெருமாக்கநல்லூர் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தஞ்சை கும்பகோணம் சாலையில் விவசாயிகள் சாலை மறியல் நடத்தினர்.
தமிழகஅரசு, விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன் 12 ஆயிரத்து 140 கோடி ரூபாய் தள்ளுபடி செய்துள்ள நிலையில், கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. கும்பகோணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட பாபநாசம் வட்டம் பெருமாநல்லூர் கூட்டுறவு சொசைட்டியில் காவலூர் மற்றும் பெருமாக்கநல்லூர் ஆகிய ஊராட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் ஏராளமான விவசாயிகள் கடன் பெற்றுள்ள நிலையில் பல விவசாயிகளுக்கு இதுவரை விவசாய கடன் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
விவசாய நிலமே இல்லாத பலரது பெயரில் போலியாக ஆவணங்கள் தயார் செய்து முறைகேடாக 50 லட்சம் ரூபாய் வரை முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் இதனை உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் விசாரிக்க வேண்டும் எனக்கோரி தஞ்சை கும்பகோணம் சாலை, நெடார் பகுதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.