தொடர் மழை: தஞ்சை மாவட்டத்தில் பரவலாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1000- க்கும் மேற்பட்ட ஏக்கர் பாதிக்கப்பட்டன
தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. அரசு முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாபேட்டை, வாளமர்கோட்டை, கழுமங்கலம், அல்லூர், அம்மையகரம், ஐம்பது மேல் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கழுமங்கலம் ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் 50 மேல் நகரத்தில் முறையாக வாய்க்கால் தூர்வராததால் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைந்து அதிகாரிகள் தூர்வாரும் பணியை செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களைக் முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ள நிலையில், தற்பொழுது பயிர்கள் முழுவதும் வீணாகி உள்ளதாகவும், மறு நடவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.