தஞ்சாவூர் அருகே மொகரம் பண்டிகை கொண்டாடிய ஹிந்துக்கள்
தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதூர் கிராம மக்கள், 300 ஆண்டுகளுக்கும் மேலாக, அல்லாவுக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதூர் கிராம மக்கள் முன்னோர்களின் வழிகாட்டின் பெயரில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக, அல்லாவுக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.
தற்போது 5 முஸ்லீம் குடும்பங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று, இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மொகரம் பண்டிகைக்கு, 10 நாட்களுக்கு முன் விரதம் இருந்து, அல்லா சாமி என்றழைக்கப்படும், 'உள்ளங்கை' உருவத்தை வெளியே எடுத்து, அதற்கு தினமும் பூஜை செய்து வழிபடுவர்.
நேற்று இரவு, ஊரின் மையத்தில் உள்ள அல்லா கோவில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டது. உள்ளங்கை திருவுருவத்தை வீதியுலாவாக, இன்று(20ம் தேதி) அதிகாலை வரை எடுத்துச் சென்றனர்.அப்போது, பெண்கள் வீடுகளில் புதிய மண் கலயத்தில் பானகம் கரைத்து, அவல், தேங்காய், பழம் வைத்து, அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
மேலும் அல்லா கோவில் முன், தீ மிதி விழா நடந்தது. ஏராளமானோர், தங்கள் பிரார்த்தனை நிறைவேற வேண்டி, தீ மிதித்து, அல்லாவை வழிபட்டனர்.