பள்ளி மாணவர்களுக்கு கட்டாயத்திருமணம்: 7 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே சிறுவர்களுக்கு நள்ளிரவில் திருமணம் செய்து வைத்த ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்;
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே பள்ளி மாணவியை மாணவனுடன் நள்ளிரவில் திருமணம் செய்து வைத்த ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருவோணம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 17 வயது மாணவரும், 16 வயது மாணவியும் படித்து வருகிறார்கள். ஒரே பள்ளியில் படித்து வந்ததால் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தனது காதலியைத் தேடி அவரது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு, நீண்ட நேரமாக மாணவனும், மாணவியும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் யார் என்று விசாரித்துள்ளனர். அப்போது மாணவியை காதலித்து வருவதாகவும், இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருவதாகவும் இருவரும் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட அப்பகுதியினர், நள்ளிரவில் மாணவன் மற்றும் மாணவி இருவருக்கும் அங்குள்ள கோயிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
நள்ளிரவில் திருமணம் செய்து வைக்கப்பட்ட தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து திருவோணம் ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர், திருவோணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருமணம் செய்து வைத்த ராஜா, அய்யாவு, ராமன், நாடிமுத்து, கோபு, கண்ணையன் உள்ளிட்ட ஏழு பேரையும் கைது செய்தனர்.