சிகரெட் கொடுக்க தாமதம்: கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர்
Delay in handing out cigarettes: DMK members smashes shop;
தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவர் மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கரி கடையும், டீக்கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பிருந்தா நகரை சேர்ந்த மன்னார்குடி திமுக நான்காவது வட்டப் பிரதிநிதி பாண்டவர் (54), அவரது நண்பர்கள் மன்னார்குடி திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் முருகேசன் மற்றும் மன்னார்குடியை சேர்ந்த திமுக நிர்வாகிகளான சுரேஷ் பிரபு, இசையரசன் ஆகியோர் கந்தர்வகோட்டை பகுதியில் நடைபெற்ற கறி விருந்துக்கு சென்று விட்டு, மன்னார்குடி பிரிவு சாலையில் உள்ள பேக்கரியில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் கடையில் இருந்த பெண் சிகரெட் கொடுக்க காலதாமதம் செய்ததால் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அந்தப் பெண்ணின் உடையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடை ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 6 பேரும் அங்குள்ள சேர், டீ பாய்லர் ஸ்டாண்டு, இருசக்கர வாகனம் மற்றும் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். தகவல் அறிந்த கடையின் முதலாளி ஆனந்தன் சூரக்கோட்டையில் உள்ள ஆட்களுடன் கடைக்கு வந்ததையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரின் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடை ஊழியர்கள் தங்களை தாக்கிவிட்டதாக கூறி ஆறு பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.