தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் சேத நிவாரண நிதி : டெல்டா விவசாயிகள் அதிருப்தி
ஏக்கருக்கு 20,000 இழப்பீடு வழங்க வேண்டும் , என டெல்டா பகுதிக்கு ஆய்வு செய்ய வந்த முதல்வரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்;
தமிழக அரசின் நிவாரணத் தொகை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாற்று நட்டு 20 நாட்களே ஆன சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் முழ்கின, சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல்நாற்றுகள் பல்வேறு இடங்களில் மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. இதுவரை ஏக்கருக்கு 25,000 வரை செலவு செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், டெல்டா மாவட்டங்களுக்கு ஆய்வு செய்ய வந்த முதல்வரிடம் இதே கோரிக்கையை விவசாயிகள் நேரில் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டருக்கு 20,000 ( ஏக்கருக்கு 8,000) ரூபாயும், சேதமடைந்த பயிர்கள் மறு சாகுபடி செய்ய ஆறாயிரம் மதிப்பிலான இடுப்பொருள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20,000 வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள நிலையில், தமிழக அரசு வெறும் 8,000 அறிவித்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளதாகவும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.