அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2022 - 2023 ஆண்டுக்கான கரும்பு அரவை பணி தொடக்கம்
ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 2 கரும்பு ஆலைகளில் இதுவும் ஒன்று;
தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2022-2023 க்கான அரவை பருவ தொடக்க விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் அருகே குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 2 கரும்பு ஆலைகளில் இதுவும் ஒன்று. இந்த சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் இயல்பான கரும்பு சாகுபடி 13 ஆயிரம் ஏக்கராக இருந்தது. தற்போது 6 ஆயிரம் ஏக்கராக குறைந்துள்ளது.
இருப்பினும் கரும்பு விவசாயிகள் இந்த ஆலையை நம்பி பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் கரும்பு சாகுபடியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2022 - 2023ம் ஆண்டிற்கான அரவை பருவம் தொடக்க விழா நடந்தது. தஞ்சாவூர் எம்.எல்.ஏ., டி.கே.ஜி. நீலமேகம், அரவை பணியை தொடக்கி வைத்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆலை தலைமை நிர்வாகியுமான வசந்தராஜன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்கள் ராமசாமி, பாஸ்கரன், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் அர்ஜுனன், துணைப் பொருளாளர் அண்ணாத்துரை, பொதுச்செயலாளர் திருப்பதி வாண்டையார், வேளாண் உதவி இயக்குனர் அய்யம்பெருமாள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.