மெக்கானிக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை

மெக்கானிக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-03-02 03:07 GMT

கும்பகோணம் பாணாதுரை, வடக்கு வீதி பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் மனைவி ஜெயசித்ரா (47). இவருக்கும் கும்பகோணம் எல்லையாத் தெரு பகுதியைச் சேர்ந்த பிள்ளைநாயகி மகன் மகேஷ்வரன் (25) என்பவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

நெருங்கி பழகி வந்த ஜெயசித்ரா மற்றும் மகேஷ்வரனுக்கு இடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு ஜெயசித்ரா கும்பகோணம் கிழக்கு போலீசில் மகேஸ்வரன் மீது புகார் அளித்தார். . புகாரின் பேரில் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் இருவருக்கும் இடையே சமரசம் செய்துவைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜெயசித்ரா மகேஸ்வரனுடனான தொடர்பை நிராகரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயசித்ரா மகேஸ்வரன் வீட்டுக்குச் சென்று நீ உயிரோடு இருக்க முடியாது என மிரட்டியுள்ளார்.இதனால் மனமுடைந்த மகேஸ்வரன் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மகேஸ்வரனை ஜெயசித்ராதான் தற்கொலைக்கு தூண்டியதாகக்கூறி மகேஸ்வரனின் தாய் பிள்ளைநாயகி கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயசித்ராவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கும்பகோணம் கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு குறித்த ஆவணங்களை சமர்ப்பித்தார். இந்த வழக்கில் விசாரணைகள் முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.

கும்பகோணம் கூடுதல் உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் குற்றம் சாட்டப்பட்ட ஜெயசித்ராவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News