திருமண்டங்குடியில் நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு திறப்பு
கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கு திறப்பு விழா நடைபெற்றது.;
கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கு திறப்பு விழா, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் முத்துச்செல்வன், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பின்புறம், சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் கொண்ட சேமிப்பு கிடங்கு தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் திறந்து வைத்தார். இந்த சேமிப்பு கிடங்கில் சுமார் 30 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை சேமிக்க முடியும். கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், ஆகிய தொகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சேமிக்கப்படும் நெல்மூட்டைகளை, இந்த சேமிப்பு கிடங்கில் பாதுகாக்கலாம்.
இந்த நிகழ்ச்சியில், பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கும்பகோணம் துணை மேலாளர் இளங்கோவன், தஞ்சை மண்டல தரக்கட்டுப்பாட்டு பொறுப்பாளர் செந்தில் குமார், கண்காணிப்பாளர்கள் சின்னத்துரை, ரவி மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஊழியர்கள், திமுக நிர்வாகிகள, பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள். திருமண்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.