பிளாஸ்டிக் கேன்களை குடுவையாக்கி பறவைகளுக்கு உணவு அளித்து வரும் இளைஞர்கள்
உபயோகப்படுத்தி தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை குடுவையாக்கி பறவைகளுக்கு உணவு அளித்து வரும் கும்பகோணம் இளைஞர்கள்;
உணவுக்காக பறவைகள் அலைந்து திரிந்து வருவதை உணர்ந்த கும்பகோணத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் கும்பகோணத்தில் உள்ள 250 தெருக்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்கள், கட்டிட சுவர்களில் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் அவற்றிக்காக உணவு வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கால் மனிதர்களுக்கே உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் எங்கேயும் பறவைகள் உணவு, தண்ணீர் குடிப்பதற்காக வசதிகள் எதுவும் இல்லை. இதனால், பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பட்டதாரி இளைஞர்கள் இணைந்து இந்த களப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருமுறை உபயோகித்து விட்டு தூக்கி எறியும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு பறவைகளுக்கு உணவு வைப்பதற்கான குடுவை தயார் செய்வது குறித்து வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அதனை பார்த்து ஏராளமானோர் அதேபோல் குடுவை தயார் செய்து தங்கள் வீடுகளில் வைத்துள்ளதை போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து இந்த தன்னார்வ இளைஞர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதன் மூலம் பறவைகளின் உணவு தேவை சற்றுப் பூர்த்தியாகியுள்ளதாக அந்த இளைஞர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
இது குறித்து தன்னார்வ குழுவைச் சேர்ந்த கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் கூறும்போது, கும்பகோணத்தை சேர்ந்த இளைஞர்களான நாங்கள் காலி தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மூலம் உணவுகுடுவை தயார் செய்து எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வைத்தோம் அதில் அதிக அளவிலான பறவைகளும், குருவிகளும், அணில்களும் உணவு உண்பதை தினமும் பார்த்தோம். நம் வீடுகளில் செய்ததுபோல் ஊர் முழுவதும் இதேபோல் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது அதற்காக நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் காலியான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் தட்டுகளை வாங்கி உணவு கூடவே தயார் செய்து அதனை கும்பகோணத்தில் உள்ள 250 பெரிய தெருக்களில் வைத்துள்ளோம்.
நாங்கள் வைத்துள்ள உணவு குடுவையில் பறவைகள் மற்றும் அணில்கள் உணவு உண்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது அதில் எங்களுக்கு மன அமைதி கிடைக்கிறது. இதில் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காதது போல் தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.