கும்பகோணம்: மூதாட்டியை கடித்த நரியை அடித்துக் கொன்ற பொதுமக்கள்
நரி கடித்து படுகாயமடைந்த மூதாட்டி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்;
மூதாட்டியை கடித்த நரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கல்லூர் ஊராட்சியில், மணிக்குளம் கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களாக அந்த கிராமத்தில் ஆடு, கோழி ஆகியவை ரத்த காயங்களோடு காலை வேளையில் இறந்து கிடந்தன. மேலும் ஆடு, கோழிகள் பல மாயமாகி போனது. அதுமட்டுமன்றி, கடந்த சில நாட்களாக இரவில் நாய்கள் குரைக்கும் சப்தம் அதிகமாக கேட்டதாம். எனவே நாய்கள் தான் ஆடு, கோழிகளை கடித்திருக்கலாம் என கிராம மக்கள் நினைத்து பிரச்னையை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.
அந்த கிராமத்தில் தனியாக குடிசை வீட்டில் வசித்து வரும் மூதாட்டி கல்யாணி(60) ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டு வாசலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தை நரி கடித்துள்ளது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, அவரது கழுத்தை நரி கடித்துக் கொண்டிருப்பதையும், மூதாட்டி போராடிக் கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், நரி மீது கற்களை வீசி விரட்டினர்.
இதையடுத்து நரி, மூதாட்டியின் குடிசை வீட்டிற்குள் சென்று பதுங்கியது. பின்னர் நரி தப்பி செல்லாதவாறு குடிசை வீட்டின் கதவை பூட்டிவிட்டனர்.ரத்த காயங்களோடு வீட்டு வாசலில் உயிருக்கு போராடிய கல்யாணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கிராம மக்கள் அனுப்பி வைத்தனர்.
பிறகு கிராம மக்கள் திரண்டு, வீட்டில் பதுங்கியிருந்த நரியை கம்புகளால் அடித்ததில், நரி அதே இடத்தில் உயிரிழந்தது. தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கிராமத்துக்கு வந்து நரியின் உடலை எடுத்துச் சென்றனர். நரி கடித்து படுகாயமடைந்த கல்யாணி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிரசிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.