பந்தநல்லூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களுக்கு சீல்
பந்தநல்லூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களுக்கு சீல் வைத்து, இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை.;
பந்தநல்லூர் பகுதியில் உள்ள நான்கு கோயில்களின் நிலங்களை அனுமதியின்றி ஆக்கிரமித்து மண் எடுத்து செங்கல் காளவாய் அமைத்து நிலத்தைப் பாழ்படுத்தி இருப்பது குறித்து புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சுந்தரராஜன் பந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுமதியின்றி ஆக்கிரமித்திருந்த பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 1.66 ஏக்கர் நிலம், அபிராமபுரம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சயனபுரத்தில் 62 சென்ட் நிலம், நெய்க்குப்பையில் 1.4 4 ஏக்கர் நிலம், அதே கிராமத்தில் மற்றொரு பகுதியில் 1.09 ஏக்கர் நிலம், மற்றொரு பகுதியில் 35 சென்ட் நிலம், நெய்வாசல் தடாகபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 7 இடங்களில் சுமார் 7.5 ஏக்கர், சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலம்,அரசேரி கிராமத்திலுள்ள 1.16 ஏக்கர் நிலம் உள்ளிட்டவை கையகப்படுத்தி சீல் வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் இளையராஜா, கோயில் செயல் அலுவலர் சுந்தரராஜன், தக்கார் கோகிலா தேவி, ஆர்.ஐ. அமுதா, விஏஓ அனுசியா உள்ளிட்ட அலுவலர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசாருடன் சம்பந்தப்பட்ட நிலப்பகுதிகளை கையகப்படுத்தினர். அறநிலை துறை சின்னம் பொறிக்கப்பட்ட சீல் வைக்கப்பட்டதோடு, அறிவிப்புப் பலகையும் ஒவ்வொரு இடத்திலும் வைக்கப்பட்டது.