தஞ்சை: வயல்களை மேம்படுத்துவதற்காக ஆட்டு கிடை போடும் வழக்கம் அதிகரிப்பு
தஞ்சை மாவட்டத்தில் வயல்களை உ இயற்கை உர வளத்துடன் மேம்படுத்துவதற்காக ஆட்டு கிடை போடும் வழக்கம் அதிகரித்து வருகிறது.;
வெளி மாவட்டங்களில் இருந்து கிடை போடுவதற்காக ஆடுகள் தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக தற்போது 100-க்கும் மேற்பட்ட குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்களுக்கு முன்பு கூலியாக நெல் கொடுத்து வந்தனர். தற்போது பணம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக வயலை கொஞ்ச காலம் காற்றாடப்போட்டு வைக்கும் போது அந்த நிலத்தில் ஆடு, மாடு கிடை போட்டால் வயலுக்கு சத்தான உரம் கிடைக்கும். மேலும் அந்த நிலத்தின் மண் வளமும் மேம்படும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தை மாதத்தில் தொடங்கும். இந்த பணிகள் பங்குனி மாதம் வரை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் அறுவடை செய்த வயல்களை ஆறப்போடுவது உண்டு. அந்த காலக்கட்டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஆடு மேய்ப்பவர்கள் (கீதாரிகள்) ஆடுகளை மந்தை, மந்தையாக லாரிகளில் ஏற்றியும், சில வேளைகளில் மேய்ச்சல் விட்டுக்கொண்டும் காவிரி பாசன பகுதிக்கு வருவது உண்டு.
தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஆடு மேய்ப்பவர்கள் அதிக அளவில் வந்துள்ளனர். இவர்கள் தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழுவினர் வந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 200 முதல் 1,000 ஆடுகள் வரை உள்ளன. மாடுகள் 50 முதல் 100 மாடுகள் வரை வைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தங்கி பகலில் ஆடுகளை மேய்க்கும் இவர்கள் இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வலை விரித்து அதனுள்ளே ஆடுகளை அடைத்து விடுகிறார்கள். இந்த ஆடுகள் இரவு பொழுதை அங்கேயே கழிக்கின்றன. இப்படி பட்டியில் அடைப்பதை தான் கிடை போடுவது என்கிறார்கள்.
இதன் மூலம் ஆடுகளின் சிறுநீரும், புழுக்கைகளும் வயலுக்கு அப்படையே கிடைக்கிறது. இதனால் பட்டி அடைக்கப்பட்ட வயலுக்கு இயற்கையான உரம் கிடைத்து விடுகிறது. ஒரு இரவுக்கு ஆடுகளை அடைப்பதற்கு ஆடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இவர்களுக்கு பணம் கிடைக்கிறது. இதே போன்று தான் மாடுகளும் கிடை போடப்படுகிறது.
தற்போது ஆடுகள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு கிடை போடப்பட்டு வருகின்றன. அறுவடை பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதால் இன்னும் 3 மாத காலத்திற்கு இவர்களுக்கு கிராக்கி ஏற்படும். இதனால் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து கிடை போடுவதற்காக வருபவர்கள் இங்கேயே தங்கி விடுகிறார்கள்.