அரசு போக்குவரத்து ஊழியர் சிஐடியு சம்மேளனம் சார்பில் உண்ணாவிரதம்
அரசு போக்குவரத்து ஊழியர் சிஐடியு சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்;
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வாயில் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு சார்பில் தமிழக அரசு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்கி பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.
உண்ணாவிரதத்திற்கு மத்திய போக்குவரத்து சங்கம் துணைத்தலைவர் அழகிரிசாமி தலைமை வகித்தார். விரைவு போக்குவரத்து மத்திய சங்க துணை தலைவர் கண்ணன் துவக்க உரையாற்றினார். மத்திய போக்குவரத்து சங்க தலைவர் மணிமாறன், பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் விளக்க உரையாற்றினர். தஞ்சை மாவட்ட சிஐடியு செயலாளர் ஜெயபால் நிறைவுரையாற்றினார்.
போக்குவரத்துக் கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு அமல்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.