சிறுமிக்கு திருமணம் தடுத்து நிறுத்தம்
சிறுமிக்கு ரகசியமாக நடத்தப்பட இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்.;
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரம் புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23), இவர் அப்பகுதியில் உள்ள சில்வர் பாத்திரங்கள் செய்யும் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரும் தாராசுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள 8-ம் வகுப்புவரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வரும் 15 வயது சிறுமி, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தநிலையில் பெண்ணுக்கு 18 வயது நிரம்பாத காரணத்தினால் இருவருக்கும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மட்டும் ரகசியமாக திருமணம் நடத்தி வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்து இன்று தாராசுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மணமகள் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் நடைபெறுவது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியுடன் நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி , மணமகன் நாகராஜ் மற்றும் இருவருடைய பெற்றோர்களை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் இருவரின் பெற்றோரிடமும் சிறுமிக்கு 18 வயது நிரம்பும் வரை திருமணம் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். கும்பகோணத்தில் சிறுமிக்கு ரகசியமாக திருமணம் நடைபெறவிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.