பாபநாசம்: திருமலைராஜன் ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவன் பலி
பாபநாசம் அருகே திருமலைராஜன் ஆற்றில் குளிக்க சென்ற 11-ம் வகுப்பு மாணவன், நீரில் மூழ்கி பலியானார்.;
தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி, தெற்கு முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சபீர் அஹமது (47). இவரது மகன் இர்பான் அஹமது (16) ராஜகிரியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றுமாலை, தனது பாட்டி வீடான கோவிந்தகுடிக்கு, இர்பான் அஹமது சென்றுள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் அங்குள்ள திருமலைராஜன் ஆற்றில் இர்பான் அஹமது குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றபோது சுழலில் சிக்கினார்.
உடனே அருகில் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, ஆற்றில் தேடி உள்ளனர். இர்பான் அஹமது ஆற்றில் தண்ணீருக்குள் மூழ்கி, இறந்தார். அவரது உடலை மீட்டு கரைக்கு தூக்கிக் கொண்டு வந்தனர். மகன் இறந்த தகவலை கேட்ட பெற்றோர்களும், உறவினர்களும், அவரது நண்பர்களும் அதிர்ச்சியடைந்து, கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து, சபீர் அஹமது பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.