மகாளய அமாவாசை: சிறப்பு அலங்காரத்தில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர்
11 அடி உயரமுள்ள ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 504 கிலோ துளசியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
கும்பகோணம், நீலத்தநல்லூர் சாலையில் அமைந்துள்ள ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு துளசி மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை, காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அல்ங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆவணி மாத மகாலய அமாவாசையை முன்னிட்டு மூலவரான 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, 504 கிலோ துளசி மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து, வழிபாடு நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைய வேண்டியும், காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும், பக்தர்கள் காணொளி வாயிலாக தரிசனம் செய்து மகா சங்கல்பம் செய்து கொண்டனர். உற்சவர் ராமர், லெஷ்மணர், சீதை, அனுமருக்கு கவசம் அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராமன், மோகன் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.