கும்பகோணத்தில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் போட்டிகள்
கும்பகோணத்தில், உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் மத்திய கிழக்கு மண்டலம் சார்பில், மண்டல அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றன.
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில், உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மத்திய கிழக்கு மண்டலம் நடத்தும் மண்டல அளவிலான சிலம்ப போட்டிகள், மத்திய மண்டல தலைவர் ராஜ மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டியில் சிலம்பாட்டம், இரட்டைக்கம்பு, வாள்வீச்சு, வேல்கம்பு, சுருள்வாள், கஜா ஆயுதம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 3 வயது முதல், 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 223 பேரும், மாணவிகள் 175 பேரும் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் நிறுவன தலைவர் முனைவர் சுதாகரன் மற்றும் மத்திய மண்டல தலைவர் ராஜா மணிகண்டன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர்.
மேலும் தமிழக அரசு விளையாட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்திருப்பது மாணவ மாணவிகளுக்கு ஊக்கப்படுத்தும் விதமாகவும், குறிப்பாக மாணவிகளிடையே சிலம்பம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து முன்பை விட அதிகமாக மாணவிகள் பங்கேற்பதாகவும் கூறி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, விளையாட்டுத்துறையில் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் 1 சதவீதம் சிலம்ப விளையாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வலங்கைமான் வட்டாரத் தலைவர் பாலசுந்தரம், செயலாளர் அந்தோணி பாஸ்கர் மற்றும் பள்ளி பாதுகாப்புக் குழுவைச் சார்ந்த பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்து மாவட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டார்கள்.