காதலர் தினத்தையொட்டி தஞ்சையில் ரோஜா பூக்களின் விற்பனை அமோகம்
காதலர் தினத்தையொட்டி தஞ்சையில் ரோஜா பூக்களின் விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி யடைந்தனர்
காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தஞ்சை பூக்கார தெருவிலுள்ள பூச்சந்தைக்கு ஓசூர், ஊட்டி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு உள்ளிட்ட பல வண்ணங்களிலும் விதவிதமான மாடல்களிலும் ரோஜா பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மேலும் பாக்ஸ் ரோஸ் அதிகளவில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.
இதில் 15 ரோஜாப்பூக்கள் அடங்கிய ஒரு பாக்ஸ் ரோஸ் ரூ.500 வரை விற்கப்பட்டது. ஆப்பிள் ரோஸ் கிலோ ரூ.150, பன்னீர் ரோஸ் ரூ.150, மஞ்சள் நிற ரோஸ் ரூ.250-க்கும் விற்பனையானது.இந்த விலை வழக்கத்தைவிட அதிகமாகும். இருந்தாலும் இளைஞர்கள் பலர் தங்களுக்கு பிடித்த ரோஜா பூக்களை வாங்கி சென்றனர். இதனால் இன்று பூ சந்தையில் ரோஜா பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.இதைப்போல் மல்லிகைப்பூ இன்று சற்று விலை அதிகரித்து கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இதேபோல் சந்தனமுல்லை ரூ.1000, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.1000-க்கும் விற்பனையானது.