கணக்கில் வராத கருப்பு பணத்தை மீட்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா
கும்பகோணத்தில் கணக்கில் வராத கருப்பு பணத்தை மீட்டு எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா நூதன முறையில் கோரிக்கை.;
கருப்பு உடை அணிந்து, கையில் பொம்மை ஹெலிகாப்டர்களை வைத்துக் கொண்டு மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் பாலா
கும்பகோணம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் பாலா கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய கருப்பு உடை அணிந்து, கையில் பொம்மை ஹெலிகாப்டர்களை வைத்துக் கொண்டு மனு அளிக்க வந்தார்.
அவர் கொடுத்த மனுவில் கூறியதாவது:
கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் எம்ஆர் கணேஷ், எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோர் நடத்திய வெக்டரி பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ 600 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா பைரோஜி பானு தம்பதியர் மட்டும் புகார் அளித்துள்ளனர். மற்றவர்கள் புகார் தராமல் உள்ளனர்.
புகார் தராமல் இருப்பவர்கள் அனைவருமே கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை கொடுத்துள்ளார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ஹெலிகாப்டர் சகோதரர் நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தவர்கள் பெயர்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் நிறுவனம் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்த வேண்டும். கணக்கில் வராத கருப்பு பணத்தை மீட்டு எடுத்து அரசு கஜானாவில் சேர்த்து, கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.