சுவாமிமலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி
சுவாமிமலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மைத் துறையினருடன் வருவாய், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கணக்கெடுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டாரத்தில் இந்த ஆண்டு 8400 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பெரும்பாலான வயல்கள் மழை நீரில் மூழ்கின. மழைநீரை வடிகட்டிய பின் மீண்டும் பயிர்கள் வளர்ந்து வந்து நல்ல நிலையில் கதிர் வந்து பால் பிடிக்கும் தருணம் மற்றும் அறுவடைக்கு 20 முதல் 25 நாட்கள் வயதுடைய பயிர்கள் கடந்த 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்டு பயிர்கள் வயலிலேயே சாய்ந்து தண்ணீரில் கிடந்தன. பல இடங்களில் பயிர்கள் முளைத்தும் உள்ளது.
இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து கவலையில் இருந்தனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி செய்துள்ள வயல்களை கணக்கெடுக்கும் பணி வேளாண்மை துறை மற்றும் வருவாய்த் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுவாமிமலை பகுதியில் பாபுராஜபுரம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த நெல் வயல்களை கணக்கெடுக்கும் பணி கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. ஆய்வின் போது வேளாண்மை துணை அலுவலர் சாரதி, உதவி வேளாண்மை அலுவலர் அலெக்சாண்டர், கிராம நிர்வாக அலுவலர் அருள்குமார், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் அரவிந்தன், கார்த்தி, மற்றும் கிராமப்புற பயிற்சிக்காக கும்பகோணம் வருகை தந்துள்ள பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.