கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவை திடீர் நிறுத்தம்

கும்பகோணத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம்

Update: 2022-02-28 15:00 GMT

கும்பகோணம் மகாமக குளம் அருகே தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு ஆதார் பதிவிடுதல், அதில் கூடுதல் விவரங்கள் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சேவை நடைபெறும். இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை தலைமை தபால் நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்டோர் ஆதார் தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வந்தனர். ஆனால் ஊழியர்கள் வராத காரணத்தினால் தபால் நிலையம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஆதார் சேவையை பெற முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், வாரநாட்களில் தபால் நிலையத்தில் ஆதார் சேவையை பெற ஏராளமானோர் வருவதால் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. மேலும் வேறு பணிகள் இருப்பதால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று ஆதார் விவரங்களை பதிவு செய்ய தபால் நிலையத்துக்கு வந்தோம். ஆனால் இங்கு திடீரென முன் அறிவிப்பின்றி ஆதார் சேவை நிறுத்தப்பட்டு இருப்பது ஏமாற்றத்தை தருகிறது என்றனர்.

இதுகுறித்து தபால் நிலைய கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறும்போது: தபால் நிலையத்தில் ஆதார் சேவையை தினமும் 150க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சேவைக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. நேற்று ஊழியர்களை நியமிக்க இயலவில்லை.

இருந்த போதும் வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் ஆதார் சேவை தொடரும். அதற்கென தனி ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். எனவே பொதுமக்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News