பொங்கி வந்த காவிரிக்கு கும்பகோணத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

பொங்கி வந்த காவிரிக்கு கும்பகோணத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கி, வரவேற்பு அளித்தனர்.;

Update: 2021-06-20 12:12 GMT

காவிரி அன்னைக்கு மலர் தூவி, தீப ஆராதனை செய்து வரவேற்ற பெண்கள்.

பொங்கி வந்த காவிரிக்கு கும்பகோணத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்பு செய்யப்பட்டது.

டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்றுமுன்தினம் மாலை காவிரியில் நுங்கும், நுரையுமாக பொங்கி வந்ததால், காவிரி நீருக்கு ஆரத்தி எடுத்தும், காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்தும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ம் தேதி மேட்டூரிலும், 16ம் தேதி கல்லணையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் தண்ணீ்ர் திறந்துவிடப்பட்டதை அடுத்து, கும்பகோணத்தில் கல்யாணராமன் படித்துறை, டபீர் படித்துறை, பகவத் படித்துறைகளில் தேங்கியிருந்த குப்பைகளை கடந்த சில நாட்களாக நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

இந்நிலையில் காவிரி ஆற்றில் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர்  மாலை கும்பகோணத்துக்கு வந்தது. அப்போது டபீர் படித்துறையி்ல் காவிரி தாய்க்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. மேலும், காவிரி ஆற்றில் நுங்கும், நுரையுமாக தண்ணீர் வந்தபோது அதனை பலரும் தொட்டு வணங்கினர்.

தொடர்ந்து காவிரி நதிக்கு மாக்கோலமிட்டு, கலசம் வைத்து ஆராதனை செய்து, காவிரியின் புகழ் போற்றி பாடி, கைலாய வாத்தியங்கள், சங்கொலி முழங்க மஞ்சள், குங்குமம், மலர்கள் தூவி, புத்தாடை ஒன்று பரிசலிட்டு தீப, தூப ஆராதனை செய்து நீர் வளம், நில வளம் பெருக, விவசாய வளம் தழைக்க பிரார்த்தனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்க தஞ்சாவூர் மண்டல பொறுப்பாளர் சுவாமி கோரஷானந்தர், தென்பாரத கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளை செயலாளர் சத்தியநாராயணன், செம்போடை வீரனார் சேவா அறக்கட்டளை பொறுப்பாளர் கோவிநீலமேகம்,காவிரி அன்னை பவுர்ணமி திருநாள் வழிபாட்டு குழு உறுப்பினர் பாலசண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் மணஞ்சேரி காவிரி ஆற்றிலும் அப்பகுதியினர் தீப ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags:    

Similar News