கும்பகோணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம் அருகே வேப்பத்தூரில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
கும்பகோணம் அருகே வேப்பத்தூரில், முன்னொரு காலத்தில் வேதபண்டிதர்கள் நிறைந்த கடிகாஸ்தலமாக (பல்கலைக்கழகமாக) இருந்ததாக காஞ்சி முனிவர் ஸ்ரீ மகா பெரியவர் கூறிய, பெருமை கொண்ட ஸ்தலமாக, அலர்மேல் மங்கா பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் உள்ளது.
இது, காவிரி நதியின் வடபுறம் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமாகும். இவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்யும் நிலையில் அர்ச்சுணனுடன் காட்சியளிக்கிறார். இத்தகைய சிறப்பு பெற்ற தலத்திற்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.
இதை தொடர்ந்து, கடந்த 03ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி, நேற்று 6ம் கால யாகசாலை பூஜை நிறைவில் மகா பூர்ணாஹூதியும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து, கடங்கள் புறப்பாடும், அதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு மூலவர் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.