கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் பங்குனி திருக்கல்யாண உற்சவம்
கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் பங்குனி திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது.;
கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவில் பழமையான வைணவ தலங்களில் ஒன்றாகும். திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட இக்கோவில் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட தலம் என தலபுராணம் கூறுகிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் பங்குனி திருவோணத்தை முன்னிட்டு சக்கரபாணி சாமிக்கும், விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சீர்வரிசை கொண்டு வருதலும், கொடிமரம் அருகே மாலை மாற்றும் வைபவமும், நலங்கு வைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து அக்னி வளர்த்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாள இன்னிசையுடன் பங்குனி திருவோண திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.