ஊராட்சி அலுவலகத்தில் உதயசூரியன் சின்னம்: அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு
கும்பகோணம் ஒன்றியம் பெருமாண்டி ஊராட்சி அலுவலகத்தில் சட்ட விரோதமாக உதயசூரியன் சின்னத்தை வைத்துள்ளதால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு;
பெருமாண்டி ஊராட்சி தலைவராக திமுக ஒன்றிய செயலாளர் பாஸ்கர் பொறுப்பு வகிக்கிறார். ஊராட்சி அலுவலக முகப்பில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சிமென்டால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினரிடையே சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக ஒன்றிய செயலாளர் அறிவழகன் தலைமையில் அக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஆர்டிஓ சுகந்தியிடம் பெருமாண்டி ஊராட்சி அலுவலகத்தின் போட்டோவுடன் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் பெருமாண்டி ஊராட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது ஊராட்சி அலுவலகத்தின் முகப்பில் ஊராட்சி தலைவரால் திமுகவின் கட்சி சின்னமான உதயசூரியன் அமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசு விதிகளுக்கு புறம்பானதும், சட்டவிரோதமானதும் ஆகும். பெருமாண்டி ஊராட்சியில் வசிக்கும் மக்கள், ஊராட்சி அலுவலகத்தை பார்த்து அதன் முகப்பில் இருக்கும் உதயசூரியன் சின்னம் உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஊராட்சி அலுவலகமாக திமுக கட்சி அலுவலகமா என்று கேட்கின்றனர்.
எனவே அரசு விதிமுறைகளை மீறி ஊராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதயசூரியன் சின்னத்தை அகற்ற வேண்டும். ஊராட்சி அலுவலகத்தில் அரசியல் சின்னத்தை அமைத்த ஊராட்சி தலைவர் மற்றும் அவருக்கு துணைபோன அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.