மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு விவகாரம்: 100 இடங்களில் மாதர் சம்மேளம் பிரசாரம்
33 % இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தி 6.9.2021 முதல் 12.9.2021 வரை 100 மையங்களில் பிரசாரம் நடத்தப்படவுள்ளது
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் வசந்திவாசு தலைமையில் கும்பகோணம், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சம்மேளன அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
மாநிலக்குழு முடிவுகளை விளக்கி, மாவட்டச் செயலாளர் டி.கண்ணகி பேசினார். மாவட்ட துணை தலைவர் எஸ்.பரிமளா, மாவட்ட பொருளாளர் என்.பிரபா, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் க.கண்ணகி, ச.வசந்தா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 % இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான மசோதா கடந்த 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, வருகின்ற செப்டம்பர் 12-ஆம் தேதியோடு 25 வருடங்கள் நிறைவடைகின்றது. இம்மசோதாவை மக்களவையில் உடனடியாக தாக்கல் செய்து, சட்டமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 6 முதல் 12 வரை ஒரு வாரம், கோரிக்கை வாரமாக அனுசரிப்பது என்று மாதர் சம்மேளனத்தின் தேசியக்குழு முடிவெடுத்துள்ளது.
இதையொட்டி, வரும் செப்டம்பர் 7 அன்று, நாடு முழுவதும் கோரிக்கை ஆர்பாட்டங்கள் நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக, தஞ்சை வடக்கு மாவட்டத்தில் 06.09.2021 முதல் 12.09.2021 வரை 100 மையங்களில் பிரசார பேரியக்கம் நடத்துவது என்றும் வரும் 07.09.2021 அன்று ஆர்பாட்டம் நடத்துவது. தமிழக சட்டமன்றத்தில் இதற்காக ஒரு தனி தீர்மானம் இயற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து, மாதர் சம்மேளனம் சார்பில் கோரிக்கை மனு அளிப்பது. பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டிப்பது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முறையான செயல் திட்டத்தை வகுக்கவேண்டும். தமிழக அரசு பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு காலத்தை அதிகரித்தது, ஊரக வேலைவாய்ப்பு நாட்கள் மற்றும் தினக்கூலியை உயர்த்தி அறிவித்திருப்பதற்கும் வரவேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.