கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம்
கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தில் ஓலைச்சப்பரம் வீதியுலா நடந்தது.;
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.
ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை பெற்றார். சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பிரமோற்சவம் 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடியுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரிஷப வாகன ஓலைச்சப்பரம் வீதி உலா நடைபெற்றது. சப்பரத்தில் பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.