ஹெலிகாப்டர் புகழ் சகோதரர்கள் இன்று அதிகாலை கும்பகோணம் நீதிபதி வீட்டில் ஆஜர்
ஹெலிகாப்டர் வாடகைக்கு விடுவதாக புகழ் பெற்று பண மோசடி செய்த சகோதரர்கள் இன்று அதிகாலை நீதிபதி முன் போலீசார் ஆஜர்படுத்தினர்.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ். இவர் பாஜகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவராக இருந்தார்.
இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் தங்களது வீட்டிலேயே நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாக தொகை வழங்கப்படும் என கூறியதால் கும்பகோணத்தில் உள்ள தொழில்அதிபர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக யாருக்கும் முதிர்வு தொகை கொடுக்கவில்லை.
இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ்பானு தம்பதியினர் தங்களுக்கு முதலீடு செய்த ரூ.15 கோடியை தராமல் ஏமாற்றியதாக காவல் துறையில் புகார் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நிதி நிறுவனத்தின் பொது மேலாளர் ஸ்ரீகாந்த் (56) என்பவர் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் நிதி நிறுவன அதிபர்களான தலைமறவாகியுள்ள எம்.ஆர்.கணேஷ் சகோதர்களை தேடி வருகின்றனர்.
கடந்த 23 ந்தேதி நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்வதற்காக பேருந்தில் செல்ல முயன்ற, நிதி நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர்களான கும்பகோணம் டபீர் கீழத்தெருவைச் சேர்ந்த மீரா (30), அவரது தம்பி ஸ்ரீதர் (29) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 27 ந்தேதி இரவு ஹெலிகாப்டர் சகோதர்களின் ஒருவரான எம் ஆர் கணேசனின் மனைவி அகிலா(33) மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த புரோகிதர் வெங்கடேசன்(58) இருவரை கைது செய்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், நேற்று, புதுக்கோடடை மாவட்டம் வேந்தன்பட்டி அருகில, ஹெலிகாப்டர் சகோதரர்களான எம் ஆர் கணேஷ், எம் ஆர் சுவாமிநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து கும்பகோணம் கோர்ட்டிற்கு ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில், தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார், வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவரது பண்ணை வீட்டில், 18 பெட்டிகள், ஒரு செல்போன், ஒரு கார் ஆகியவற்றுடன் ஹெலிகாப்டர் சகோதரர்களான எம் ஆர் கணேஷ், எம்ஆர் சுவாமிநாதன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
பின்னர் இருவரையும் கும்பகோணம் கோர்ட்டுக்கு அழைத்து வந்து நீதிபதி. தரனிதர் வீட்டில், இன்று அதிகாலை 2 மணி அளவில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். வரும் 19ம் தேதி வரை ஹெலிகாப்டர் சகோதரர்கள் இருவரையும், கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.