சுவாமிமலை சுபநிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் மர்ம நபர்கள் எஸ்கேப்
சுவாமிமலையில் சடங்கு நிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் ஓட்டம் பிடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்பகோணத்தை அடுத்த புளியஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ராஜகோபால். இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கிறார். ராஜகோபால் தனது மகளின் பூப்புனித நிகழ்ச்சியை சுவாமிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடத்தினார்.
நிகழ்ச்சிக்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் மொய்ப் பணம் வசூல் செய்ய ராஜகோபாலின் உறவினர் ரவி என்பவரின் தலைமையின் கீழ் 2 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரும் சுமார் ஒரு மணி நேரம் உறவினர்களிடம் மொய் பணம் வசூல் செய்தனர்.
அப்போது, ராஜகோபாலின் நண்பர்கள் போல் வந்த சிலர், மொய் பணம் வசூல் செய்யும் இடத்தில் நின்று உள்ளனர். அப்பொழுது மொய் பணத்தை நோட்டில் எழுதிக் கொண்டிருந்த ரவி, மொய் பணம் பதிவு செய்யும் நோட்டை அருகிலிருந்த டேபிளின் கீழ் இருந்து எடுத்து உள்ளார். அந்த நேரத்தில் டேபிளின் மேல் வைக்கப்பட்டிருந்த மொய் பை திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகோபாலின் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் சிலர், பல்வேறு பகுதிக்கும் சென்று மொய் பையை திருடிய மர்ம மனிதர்களை தேடினார்.
இதையடுத்து ராஜகோபால் மொய் பணத்தோடு ஓடிய மர்ம மனிதர்களை பிடித்துக் கொடுக்கும் படி சுவாமிமலை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அப்பகுதியில் வந்து சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர். சுப நிகழ்ச்சியில் நூதன முறையில் மொய்ப் பணத்தை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றது சுவாமிமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.