கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு நேரில் தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுமார் 100 பேருக்கு நகர் நல அலுவலர் பிரேமா நேரில் சென்று தடுப்பூசி செலுத்தினார்
தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கு தமிழக அரசு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இருப்பினும் ஒருசிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பகோணத்தில் உள்ள பெரிய வியாபார நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்பது குறித்து நகராட்சி சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரு சிலர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நகர்நல அலுவலர் பிரேமா, கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள வியாபார நிறுவனங்களில் நேரில் சென்று அந்த நிறுவனங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தினார். அந்த வகையில் சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது குறித்து, நகர்நல அலுவலர் பிரேமா கூறுகையில், கொரோனா நோய் பரவல் தற்போது கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் அதன் 3வது அலையின் தாக்கம் விரைவில் வரக்கூடும். எனவே அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நகரில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் வழங்கப்பட உள்ளது. பொது மக்கள் எந்தவித பயமுமின்றி கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்ள முன்வர வேண்டும். தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தர தயங்காமல் நகர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.