கும்பகோணம் அருகே கடை ஊழியரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது
கும்பகோணத்தை அடுத்த பழைய பாலக்கரையில் கடை ஊழியரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது.;
கும்பகாேணத்தில் கடை ஊழியரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முல்லைவளவன்.
கும்பகோணத்தை அடுத்த பழைய பாலக்கரையில், தலப்பாக்கட்டி பிரியாணி மற்றும் ஹோட்டல் விரைவில் திறப்பதற்காக மராமத்து பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.
அந்த கடையில், மரவேலைகளை, கும்பகோணத்தை அடுத்த அண்ணலக்கிரஹாரம், காளிமுத்து நகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ஹரிஹரன் (42), என்பவர் செய்து கொண்டிருந்தார். அப்போது அக்கடைக்கு பைக்கில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன், ஹரிஹரனை பார்த்து யாருடா கடை திறப்பது இங்க வாடா என்று கூப்பிட்டார்.
உடனே, ஹரிஹரன், நீ இங்கே வா என்று கூப்பிட்டுள்ளார். இது குறித்து முல்லைவளவன், தனது ஆதரவாளர்களுக்கு தகவல் கொடுத்தார். தகவலையடுத்து, மூன்று கார்கள் மற்றும் பைக்குகளில் 10 க்கும் மேற்பட்டோர் வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஹரிஹரனுக்கு ஆதரவாக பாலக்கரை, கல்யாணராமய்யர்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சித்திரவேலு(40) என்பவர் முல்லைவளவன் மற்றும் இவரது ஆதரவாளர்களை தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த முல்லைவளவன் தரப்பினர், ஹரிஹரன் மற்றும் சித்திரவேலு ஆகிய இருவரையும் கம்பி மற்றும் பைப்பால் பயங்கரமாக தாக்கினர். இதில் ஹரிஹரனுக்கு தலை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டும், சித்திரவேலுக்கு வலது கை, மூக்கு, உதடு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ஹரிஹரன், சித்திரவேலு, கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, முல்லைவளவனை கைது செய்து சிறையிலடைத்தனர்.