கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம்
கும்பகோணம் மாமன்ற உறுப்பினர்கள்ட சாதாரண கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கும்பகோணம் மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை மேயர் தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க. மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் வருவாயை பெருக்குவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொசு தொல்லையை கட்டுப்படுத்தவும் கொசு உற்பத்தியை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் ரூபாய் 23 லட்சத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் தி.மு.க உறுப்பினர் முருகன் பேசுகையில் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாகவும் வேறு சில காரணங்களுக்காகவும் அவ்வப்போது குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது. முன்னறிவிப்பின்றி குடிநீர் நிறுத்தப்படுவதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருபவர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. குடிநீர் நிறுத்தப்படுவது முன்கூட்டியே அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு செய்ய வேண்டும். மேலும் குடிநீர் தடை செய்யப்படும் நாட்களில் அந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்து பேசிய துணை மேயர் தமிழழகன் குடிநீர் நிறுத்தம் குறித்து முன்னறிவிப்பு செய்யவும் மாற்று ஏற்பாடுகள் செய்து தரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் தாராசுரம் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெடில் ஏராளமான கடைகள் இருந்துவரும் நிலையில் ஆண்டு வருமானம் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் வருவாயை ரூபாய் 5 கோடி அளவில் பெருக்கும் வகையில் மார்க்கெட் பகுதியை 3 ஆக பிரித்து குத்தகைக்கு விடுவதன் மூலம் ஆண்டு வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் நன்றி கூறினார்.