கும்பகோணம் ஜெகநாதபெருமாள் கோவிலில் சுக்லபட்ச அஷ்டமி சூக்த ஹோமம்

108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40 ல் நடுநாயகமாகத் திகழ்வது நாதன்கோயில் ஷேத்திரமாகும்.

Update: 2021-12-11 16:00 GMT

108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் எனும் நாதன்கோயில் சேத்திரமாகும். இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது.

இந்த தலத்தில் உள்ள பெருமாளை திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார். மேலும் மகாலெட்சுமி பிரார்த்தனை செய்து எட்டு அஷ்டமி விரதம் இருந்து, எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கோவிலில் மாதம்தோறும் வளர்பிறை அஷ்டமி அன்று சிறப்பு சுக்லபட்ச மகாயாகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கடங்கள் புறப்பாடு, ஆவாகனமும் மகா பூர்ணாஹூதியும் நடைபெற்றன. தொடர்ந்து செண்பகவல்லி தாயார் உடனாகிய ஜெகன்நாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா மற்றும் உடன் பயணித்த 11 துணைநிலை தளபதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் தேச பாதுகாப்பு பணியில் சேவையை நினைவு கூர்ந்து அவர்களின் மறைவிற்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News