கும்பகோணத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்; நகராட்சி அதிகாரிகள் அதிரடி
கும்பகோணத்தில் சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர்.;
கோவில்களின் நகரம் எனப் போற்றப்படும் கும்பகோணத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் கும்பகோணம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது.
இந்நிலையில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் நான்கு வீதிகளிலும் உள்ள கடைத்தெருவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடந்து மற்றும் வாகனங்களில் செல்ல முடியாதபடி சுமார் 2 அடி முதல் 4 அடி வரை தங்கள் கடையின் முகப்பு தாவரங்களை சாலை வரை ஆக்கிரமித்து காட்டியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சாலையோர வியாபாரிகளும் சாலைகள் முழுவதும் ஆக்கிரமித்து கடைகளை வைத்திருந்ததால் 40 அடி சாலை 20 அடி சாலையாக குறுகியது. இதனால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து கும்பகோணம் நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை வணிகர்கள் மற்றும் தரைக்கடை வியாபாரிகளிடம் நகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார். ஆனாலும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கும்பகோணம் நகராட்சி ஆணையர் நவேந்திரன் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு வணிகர்கள், தரைக்கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றினர்.